உயரமான இடங்களில் வாழ விரும்பும் தூக்கணாங்குருவிகள்; ஏன் தெரியுமா?

உயரமான இடங்களில் வாழ விரும்பும் தூக்கணாங்குருவிகள்; ஏன் தெரியுமா?

  • science
  • September 12, 2023
  • No Comment
  • 14

தூக்கணாங்குருவி தனக்கான கூட்டைக் கட்டுவதற்கு முன் அந்த இடம் பாதுகாப்பானது தானா என்பதை முடிவு செய்யும். பெரும்பாலும், நீர் நிலைகளின் மீது தொங்கிக் கொண்டிருப்பது போன்ற இடத்தை விரும்பி தேர்ந்தெடுக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில் இருந்து மறைந்து விட்டதாக அனைவருமே ஆதங்கப்பட்டு கொண்டோம். சிட்டுக்குருவிகள் மட்டுமா நம்மை விட்டு நீண்ட தூரம் கடந்து சென்றிருக்கிறது? கூர்ந்து கவனித்தால், கிராமப் பகுதிகளிலும் நகர்ப்புறங்களிலும் மனிதர்கள் வாழும் நிலப் பரப்பில் நம்மோடு இணைந்து இயைந்து வாழ்ந்த தூக்கணாங்குருவி உள்ளிட்ட பல பறவைகள் இன்று நம்மை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றதை உணரமுடியும்.

நாம் தொலைத்த பறவைகளில் முக்கியமானதுதான் தூக்கணாங்குருவி. நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்த இவற்றை, இன்று காண்பதே அரிதாகிவிட்டது. தூக்கணாங்குருவிக்கு ஏற்பட்ட இந்த நிலையை மாற்றவும் அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் அறிவியலாளர்கள் முயன்று வருகிறார்கள்.

சிட்டுக் குருவியைப் போலவே உடல் அளவை கொண்டவை தூக்கணாங்குருவிகள். ஆண் குருவிகள் உச்சந்தலையிலும், மார்புப் பகுதியிலும், முதுகுப் பகுதிகளிலும் மஞ்சள் வர்ணத்தை கொண்டிருக்கும். பெண் தூக்கணாங்குருவி பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட சிட்டுக் குருவியைப் போலவே தோற்றமளிக்கும்.

பெரும்பாலும் தானியங்களை உண்ணும் தூக்கணாங்குருவிகள் கூடுகட்டும் காலங்களிலும், இனப்பெருக்க காலங்களிலும், குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் காலங்களிலும், பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், சிறு தவளைகள், புழுக்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் இவை கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. சில மரங்களில் 20 முதல் 30 தூக்கணாங்குருவிகள் வரை கூடுகளைக் கட்டியிருப்பதைக் காணலாம்.

தூக்கணாங்குருவிகளைப் பொறுத்த வரையிலும், சிட்டுக்குருவிகளுடனும் திணைக் குருவிகளுடனும் சேர்ந்து ஒரே மரத்தில் கூட்டமாய் வாழ்வதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பறவைகளைக் காட்டிலும் தூக்கணாங்குருவிகளின் சிறப்பு என்னவென்றால், அதன் கூடு கட்டும் திறமையே. மெத்தப் படித்த அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் மிஞ்சும் அளவுக்கு நுணுக்கமான கட்டுமானத் திறமை கொண்டுள்ளன.

அவை கூடு கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் இருந்து அந்தக் கூட்டை வடிவமைப்பது வரை எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாகவும் அறிவியல் பூர்வமாகவும் செய்து முடிக்கின்றன. பனை மரங்கள், ஈச்ச மரங்கள் போன்ற உயர்ந்த மரங்களை முதலில் தேர்வு செய்கின்றன. ஆண் பனை மரங்களும், ஆண் ஈச்ச மரங்களும், இருக்கும்பட்சத்தில் அவற்றில் காய்கள் காய்க்காது என்பதால் மனிதர்களின் தொந்தரவு இருக்காது என்பதை அறிந்து அந்த மரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இடத்தை தேர்வு செய்கின்றன.

பொதுவாக நீர்நிலைகளின் அருகில் தங்களின் கூடுகளுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. அல்லது நீர்நிலைகளுக்கு மேலாக கூடுகள் தொங்குவது போன்ற அமைப்பு கொண்ட மரங்களை விரும்பித் தேர்வு செய்கின்றன. சில சமயங்களில், கிணற்றுக்குள் வளர்ந்திருக்கும் செடிகளையும் தேர்வு செய்யும். சில இடங்களில், நீர்நிலைகளின் அருகில் இருக்கும் முள் செடிகளை கவனமுடன் தேர்வு செய்திருப்பதைக் காண முடியும்.

அத்தகைய இடங்களை கூடு கட்டுவதற்குத் தேர்வு செய்வதற்கு முக்கிய நோக்கம் பாம்பு, காகம் போன்ற இரைக்கொல்லிகள் தங்களின் கூடுகளையும் குஞ்சுகளையும் நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதே. மேலும் பனை மரம், தென்னை மரம், ஈச்ச மரம் போன்ற மரங்களில் கூடு கட்டும்போது இலையின் நுனியில் கூடுகள் தொங்குவது போன்று வடிவமைக்கும். ஏனென்றால் இரைக்கொல்லிகள் ஒருவேளை மரத்தில் ஏறினால் கூட அவற்றினால் நுனியை நெருங்க இயலாது என்ற சிந்தனையே.

தூக்கணாங்குருவிகள் மழைக் காலத்தின் தொடக்கத்தில் கூடமைக்கத் தொடங்கும். காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையை (Leeward side) தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மரங்களில் ஒரே மரத்தில் ஒரே பகுதியில் பல கூடுகள் கூட்டமாக இருப்பதைக் காணலாம். அதன் முக்கிய நோக்கம் வேகமாக வீசும் காற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதே.

கூட்டின் நீண்ட அடிப்பகுதி காற்றடிக்கும் திசைக்கு எதிர்புறத்தில் உள்ளவாறு அமைத்துக் கொள்ளும். அவ்வாறு அமைக்கும் போது காற்றடிக்கும் போது முட்டைகள் கீழே விழுவதைத் தவிர்க்க இயலும். கூடு கட்டுவதற்கு நீண்ட நெற்பயிரின் தாள், கரும்பு தோகை,தென்னங்கீற்று, பனை ஓலை போன்றவற்றிலிருந்து தன் கூம்பு போன்ற அலகால் நீண்ட நார்களை கிழித்து எடுத்து வந்து சேர்க்கும்.

உயரமான இடத்தை பிடிக்க தூக்கனாங்குருவிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். பொதுவாக அனுபவசாலி குருவிகளே இந்தப் போட்டியில் வெற்றி பெற்று உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும். இடம் பிடித்த பின்னர் தூக்கணாங்குருவிகள் கூடு கட்ட ஆரம்பிக்கும். இதில் கவனிக்க வேண்டிய மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இடம் தேர்வு செய்வது முதல், கூட்டை பாதியளவுக்கு கட்டி முடிப்பது வரை ஆண் தூக்கணாங்குருவியே தனியாக செய்து முடிக்கும்.

கூட்டில் ஜோடி தூக்கணாங்குருவிகளுக்கு தனியாக ஓர் அறையும், முட்டைகளுக்கு தனியாக ஓர் அறையும் அமைக்கப்படும். முட்டைகள் இருக்கும் அறையைச் சுற்றி களிமண்ணைக் கொண்டு வந்து ஒட்டி வைக்கும். காற்றினால் கூடு அசைந்து முட்டைகள் உடையாமல் இருப்பதை களிமண் உறுதி செய்யும். குஞ்சுகள் பிறந்த பின்னர், பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை கொண்டுவந்து களிமண்ணில் ஒட்டி வைக்கும். அவை அந்த குஞ்சுகளுக்கு இரையாகும்.

தூக்கணாங்குருவிக் கூட்டில் உள்ள களிமண்ணில் மின்மினிப் பூச்சி போன்ற வெளிச்சம் உமிழும் பூச்சிகளைக் கொண்டு வந்து ஒட்டி வைப்பதன் மூலம் அந்தக் கூடுகளுக்கு வெளிச்சம் கிடைக்கும். அந்த ஒளியைப் பார்த்து பயந்து போய், பாம்பு போன்ற இரைக்கொல்லிகள் கூட்டின்அருகில் வருவது தடுக்கப்படும்.

சமீப காலங்களில், மின்மினிப் பூச்சிகளைப் பார்ப்பதும் கூட அரிதாகிவிட்டது. இவ்வாறு ஒரு கூட்டை கட்டிமுடிக்க ஒரு குருவி சுமார் 500 முறை பயணம் செய்ய வேண்டி இருக்குமாம். சுமார் 18 நாட்கள் உழைப்பிற்குப் பின்னர் ஒரு கூடு பாதியளவுக்கு கட்டி முடிக்கப்படுகிறது.

ஆண் தூக்கணாங்குருவி கூட்டை கட்டியதும் அந்தப் பகுதியில் திரியும் பெண் தூக்கணாங்குருவிகளுக்கு தன் இறகுகளை வேகமாக அசைத்தும் கூடுகளின் மீது தொங்கிக் கொண்டே சத்தம் எழுப்பியும் சமிக்ஞை மூலம் அழைப்பு விடுக்கும். பாதியளவு கட்டப்பட்ட கூட்டை பெண் குருவி பார்வையிடும். அவ்வாறு பார்வையிடும்போது, கூடு மற்றும் குஞ்சுகளின்பாதுகாப்பே பெண் குருவிகளின் முதன்மையான கவலையாக இருக்கும்.

உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்ட கூடுகளுக்கே பெண் குருவிகள் முன்னுரிமை கொடுக்கின்றன. கூட்டை பார்வையிடும் பெண் குருவிகள் அதில் திருப்தியடைந்தால் இரண்டும் சேர்ந்து கூட்டின் நுழைவாயிலை அமைக்கின்றன. அதோடு அந்த இனப்பெருக்க காலத்திற்கான ஒப்பந்தப்படி இரண்டும் இணை சேர்ந்து, முட்டையிட்டு அடுத்த தலைமுறைக்கான குஞ்சுகளை உருவாக்கும்.

தூக்கணாங்குருவிகளைப் பொறுத்தவரை, குஞ்சுகள் பிறந்த பின்னர் மிக அரிதாகவே ஆண் குருவி குஞ்சுகளைப் பராமரிக்கும். குஞ்சுகளைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பு முழுவதும் பெண் குருவியையே சேர்ந்தது. இவ்வாறு ஒரு குடும்பத்தை உருவாக்கிய பின்னர் ஆண் குருவி வேறு ஒரு கூட்டை உருவாக்க ஆரம்பிக்கும். மீண்டும் வேறொரு ஒரு பெண் குருவியுடன் சேர்ந்து மேலும் குஞ்சுகளை உருவாக்கும்.

ஒரே சமயத்தில் ஒரு ஆண் தூக்கணாங்குருவி பல கூடுகளை கட்டுவதையும் காணலாம். தூக்கணாங்குருவிகளில் ஆண் பெண் என இரு பாலருமே பல துணையுடன் வாழும் தன்மை (Polygamus) கொண்டவை. எனவே பெண் குருவியும் குஞ்சுகள் வளர்ந்தவுடன், வேறு ஆண் குருவியை நோக்கிச் செல்லும். இவ்வாறு ஒரே வருடத்தில் பல குடும்பங்களையும் தலைமுறைகளையும் அவை உருவாக்குகின்றன. இத்தகைய அரிய குணங்களைக் கொண்ட தூக்கணாங்குருவிகள், மனிதர்களோடு பல காலமாக வாழ்ந்து வந்தாலும,சில காலங்களாக அவற்றை பார்ப்பது மிகவும் அரிதாகி வருகிறது. நம்மோடு இயைந்து வாழ்ந்த தூக்கணங்குருவி உள்ளிட்ட பல்வேறு வாழ்வினங்கள் திடீரென காணாமல் போவது அல்லது எண்ணிக்கையில் குறைவது என்பது சூழலியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இயற்கை மனிதர்களுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Related post

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாசா

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாசா

செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. குறித்த விண்கலத்தை நேற்று(19.10.2023) நாசா அனுப்பி வைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில்…
லேப்டாப் நிறுவனமான Acer வழங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

லேப்டாப் நிறுவனமான Acer வழங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க விரும்புகிறீர்களா? இந்திய சந்தையில் புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது. மடிக்கணினிகள் மற்றும் கணினி வன்பொருளுக்கு பெயர் பெற்ற தைவான் தொழில்நுட்ப நிறுவனமான…
ஒக்டோபரில் நிகழவுள்ள சூரிய மற்றும் சந்திர கிரகணம்: இலங்கையில் பார்க்க முடியுமா?

ஒக்டோபரில் நிகழவுள்ள சூரிய மற்றும் சந்திர கிரகணம்: இலங்கையில் பார்க்க முடியுமா?

இம்மாதம் ஒக்டோபர் 14 ஆம் திகதி வளைய சூரிய கிரகணம் மற்றும் ஒக்டோபர் 28 ஆம் திகதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *