
சோசியல் மீடியா பிராண்டிங் செய்வது எப்படி?
- Business
- September 11, 2023
- No Comment
- 36
“இன்றைய காலத்தில் டி.வி பார்க்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் சமூக வலைதளங்கள் பார்க்காமல் இருப்பதில்லை. அதனால் நமது பிராண்டை மக்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது தெரியப்படுத்திக்கொண்டே இருப்பதற்கு சமூக வலைதளங்கள் தான் சிறந்த சாய்ஸ்.”
இந்த காலத்தில் நீங்கள் தயாரித்து விற்பனை செய்யும் எந்தப் பொருளாக இருந்தாலும், அதற்கு சமூக வலைதள பிராண்டிங் மிக முக்கியமான ஒன்று. இதை எப்படி செய்யவேண்டும் என்பதை விளக்குகிறார் டிஜிநாடு பிராண்டிங் நிறுவனத்தின் பிசினஸ் ஸ்ட்ரேடஜிஸ்ட் வெங்கடேஷ் சீனிவாசன்..

மார்க்கெட்டிங் vs பிராண்டிங்
”இன்றைய காலத்தில் டி.வி பார்க்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் சமூக வலைதளங்கள் பார்க்காமல் இருப்பதில்லை. அதனால் நமது பிராண்டை மக்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது தெரியப்படுத்திக்கொண்டே இருப்பதற்கு சமூக வலைதளங்கள் தான் சிறந்த சாய்ஸ்.
சமூக வலைதளம் மூலம் ஒரு பொருளை விற்பனை செய்வது சமூக வலைதள மார்க்கெட்டிங் ஆகும். சமூக வலைதள மூலம் ஒரு பிராண்டிற்கு வெளிச்சம் தருவது சமூக வலைதள பிராண்டிங்.
ஆக, சமூக வலைதள மார்க்கெட்டிங் மற்றும் சமூக வலைதள பிராண்டிங் வேறு வேறு என்பதையும், மார்க்கெட்டிங்கின் ஒரு பிரிவே பிராண்டிங் என்பதையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
துறைக்குத் துறை மாறுபடும்!
பிராண்டிங்கில் ஒவ்வொரு துறைக்கேற்ப சமூக வலைதளங்களும் மாறுபடும். எல்லாத் துறைகளுக்கும் எல்லா சமூக வலைதளங்களிலும் பிராண்டிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
உதாரணமாக ஐ.டி, எம்.என்.சி போன்ற நிறுவனங்களுக்கு ‘லிங்க்ட் இன்–ல் பிராண்டிங் செய்தால் போதும். டெக்ஸ்டைல், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு கூகுள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பிராண்டிங் செய்யலாம்.
இதை நேரெதிராக இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு லிங்க்ட் இன்னில் பிராண்டிங் செய்தால் மக்களிடம் போய் சேராது. அதனால் நம் நிறுவனத்திற்கு என்ன சமூக வலைதளம் சரியாக இருக்கும் என்று யோசித்து தேர்ந்தெடுங்கள்.
இந்த நான்கும் முக்கியம்…
அனைத்து பிராண்டிங்கிலும் brand creation, brand positioning, brand establishment, brand stabilization ஆகிய நான்கும் மிக மிக முக்கியம். ஒரு பிராண்டை உருவாக்கி (brand creation) அதை திரும்ப திரும்ப மக்கள் மனதில் பதிய வைத்துக்கொண்டே (brand positioning) இருக்க வேண்டும்.
இதை நாம் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தாலே, மார்க்கெட்டில் பிராண்ட் நன்கு பதிந்துவிடும் (brand establishment). பிராண்ட் தான் மக்கள் பதிந்துவிட்டதே என்று இருந்துவிடாமல், தொடர்ந்து பிராண்டிங் செய்வது மிக மிக அவசியம் (brand stabilization).

இவை அவசியம்…
ஒரு நிறுவனம் சமூக வலைதள பக்கம் மூலமாக தான் அதன் நிறுவனத்தையும், பொருள்களையும் பிராண்டிங் செய்ய முடியும். அதனால் அந்த பக்கத்தில் நிறுவனம் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது, அதன் தரம், சாதனை, நம்பகத்தன்மை ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும். இது நிறுவனத்தின் பிராண்டிங்கிற்கு கூடுதல் பலம் மற்றும் கூடுதல் நம்பிக்கையை சேர்க்கும்.
கூகுள் போன்ற தளங்களில் SEO-க்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். நமது நிறுவனத்தின் பொருள் மற்றும் சர்வீஸ் சம்மந்தமான விஷயங்களை யார், எங்கே தேடினாலும், நமது நிறுவனத்தின் பேர் முதன்மையாக வருவதற்கு வழி செய்ய வேண்டும்.

அது எப்படி?
ஒரு பிராண்டை மக்கள் மனதில் ஆழமாகப் பதியவைப்பது எளிதல்ல. பிராண்டிங்கில் தெளிவான பார்வை வேண்டும். என்ன பொருள், அதை வாங்கும் கஸ்டமர்கள் யார், அவர்களிடம் ஒரு பொருளை எப்படி கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கிற மாதிரி ஆராய்ச்சி செய்யவேண்டும்.
உதாரணமாக இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு விஷயம் அதிக நேரம் எடுப்பது பிடிப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ரீல்ஸ் போன்ற சிறிய வீடியோக்கள் மூலம் பிராண்டிங்கை கொண்டு செல்ல வேண்டும்.
அடுத்ததாக, டிரெண்டிங்கில் இருக்கும் செலிபிரிட்டிகள், இன்ப்ளூயன்சர்கள் மூலம் அவர்களை எளிதில் அணுகலாம். இதுவே பெரியவர்களிடம் அனுபவம் மிக்க நிபுணர்கள் மூலம் ஒரு பொருளை கொண்டு சேர்க்கலாம்.
இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு… உதாரணமாக, பிறந்த குழந்தைகளின் ஆடை கடை பிராண்டிங் பிறந்த குழந்தைகளை ஈர்ப்பதாக இருக்கக் கூடாது. அவர்களின் பெற்றோரை ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
போஸ்ட்டுகளை தொடர்ந்து வெளியிட வேண்டும்…
‘ஒரு போஸ்ட் போட்டுட்டோமே’ என்று விட்டுவிடாமல் தொடர்ந்து போஸ்ட் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தத் துறையில் தினமும் போஸ்ட் போட முடியாது. என்றாலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தொடர்ந்து போஸ்ட் போட வேண்டும்.
போஸ்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, அது மக்களிடம் சென்று சேர்வதும் அதிகரிக்கும். முதலில் நிறுவனத்தின் ப்ளஸ்களை நாம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
இது நமது போஸ்ட்களில் பிரதிபலிக்க வேண்டும். ஒரு போஸ்ட் ஏனோதானோ என்று இருக்காமல், அந்த சமூக வலைதளப் பக்கத்தை குறைந்தபட்சம் 10 நொடிகளாக கவனிக்க செய்ய வேண்டும்.

ஹேஸ்டேக் முக்கியம்…
ஒவ்வொரு போஸ்ட்டுகளுக்கும் ஹேஸ்டேக் மிக மிக முக்கியம். நாம் தேர்ந்தெடுக்கும் ஹேஸ்டேக்கைப் பொறுத்துத்தான் நாம் பதிவிடும் போஸ்ட் பல கண்களில் படும். அதனால் ஹேஸ்டேக் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஏற்கெனவே பிரபலமான கம்பெனிகள் தங்களுடைய புதிய வரவுகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். மேலும், ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களின் பிராண்டிங்கும் டிரெண்டிங்கிலேயே இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.

USP அவசியம்…
எல்லா விஷயங்களுக்கும் Unique Selling Proposition (USP) அவசியம். இந்த நிறுவனத்தின் இந்த ஸ்டைல் நன்றாக ரீச் ஆகிறது என்று காப்பி அடிக்காமல், நமது நிறுவனத்திற்கு என தனி ஸ்டைலை உருவாக்க வேண்டும். அதை அடையாளமாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு போஸ்டும் தெளிவாகவும், தனித்தும் இருக்க வேண்டும்.
உதாரணமாக, இரண்டு சேலைக் கடைகளை எடுத்துக்கொள்வோம். இரண்டு சேலைக் கடைகளின் சமூக வலைதளப் பக்கங்களிலும் சேலைகளை மட்டும் போஸ்டாக போடாமல், அந்தந்த கடை சேலைகளின் தனித்துவம் குறித்து போஸ்டுகள் குறிக்க வேண்டும்.
அனைத்து பிராண்டிங்கும் வியாபாரமாக மாறும் என்று சொல்ல முடியாது. ஆனால், பிராண்டிங்கின் முக்கியமான வேலை நிறுவனத்தைக் கவனிக்கவைப்பதும், நிறுவனத்திற்கு அழைத்து வருவதும் ஆகும்.
அப்படி கவனித்து, உள்ளே அழைத்துவரும் கஸ்டமர்களை மார்க்கெட்டிங் நமது பொருள்களை வாங்க செய்துவிடும்” என்று தெளிவாக கூறி முடிக்கிறார்
- Tags
- Business