கூகுள், உங்களை வேவு பார்க்கிறது என்பது உண்மையா..?
- Technology
- October 9, 2023
- No Comment
- 10
ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துகொண்டு அவற்றின் தளத்தில் பிரதான தேடுபொறியாக கூகுள் இருக்கும் வகையில் திட்டமிட்டிருக்கிறது. கூகுளின் ஏகபோகத்துக்கு இது ஓர் உதாரணம்.
உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களின் பெரும்பாலான உயர்பதவிகளில் இந்தியர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் சூழலில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கும், மைக்ரோசாஃப்ட்டின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளாவுக்கும் இடையே சண்டை மூளும் சூழல் உண்டாகி இருக்கிறது.
உலகில் பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் தேடுபொறியாக கூகுள் இருந்துவருகிறது. தேடுபொறி மட்டுமல்லாமல், ஜிமெயில், யூடியூப், ஆண்ட்ராய்டு எனப் பல்வேறு தொழில்நுட்ப சேவைகளிலும் கூகுள் நிறுவனம் முன்னணியில் இருந்துவருகிறது.
அதே சமயம், கூகுள் நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. கூகுள் பயனாளர்களின் விவரங்களைச் சேகரித்து அதை பிசினஸ் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு அதன் மீது வைக்கப்பட்டிருக்கிறது.
பயனாளர்கள் மொபைல், லேப்டாப், கணினி போன்றவற்றில் தேடுகிற, பதிவேற்றுகிற விவரங்களை மட்டுமல்லாமல், குரல் பதிவுகளையும் ஒட்டுகேட்கிறது என்கிற விமர்சனமும் கூகுள் மீது முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்காகப் பலமுறை கூகுள் நிறுவனத்தை அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக்கு இழுத்திருக்கிறது. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின்மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம் பற்றி சத்ய நாதெள்ளா சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவை டெக்னாலஜி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. சத்ய நாதெள்ளா அப்படி என்ன கூறியிருக்கிறார்?
”கூகுள் நிறுவனம் டெக்னாலஜி துறையில் ஏகபோகமாக ஆதிக்கம் செய்துவருகிறது. கூகுளின் இந்த ஆதிக்கத்தால் அதன் போட்டி நிறுவனங்கள் எதுவும் தங்களுடைய பிசினஸில் நீடித்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் வைத்திருக்கும் ஆதிக்க சக்தியைப் பயன்படுத்தி பப்ளிஷர்கள், விளம்பரதாரர்கள் என அனைவரையும் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறது.
எல்லோரும் திறந்த இணையதளம் பற்றிப் பேசுகிறோம். ஆனால், இங்கு இருப்பதெல்லாம் கூகுள் இணையதளம் மட்டும்தான். இதைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை.
ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துகொண்டு அவற்றின் தளத்தில் பிரதான தேடுபொறியாக கூகுள் இருக்கும் வகையில் திட்டமிட்டிருக்கிறது. கூகுளின் ஏகபோக ஆதிக்கத்துக்கு இது ஓர் உதாரணம்.
இது போன்ற பல விஷயங்களில் கூகுள் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி கண்டுவருகிறது. இதனால் போட்டி நிறுவனங்கள் அழிவுக்குள்ளாகும் நிலையில் இருக்கின்றன” என்று சத்ய நாதெள்ளா சரமாரியாக விமர்சித்துள்ளார்.
கணினி இயங்குதள நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிங் என்ற தேடுபொறி, யாஹூ, டக்டக்டூ போன்ற தேடுபொறிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
ஆனால், கூகுள் தோடுபொறிதான் 90% மக்கள் பயன்படுத்து கிறார்கள். இதனால் கூகுள் ஏகபோகமாக இருந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார் சத்ய நாதெள்ளா.
சத்ய நாதெள்ளா 2014-ல் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ ஆனார். அதற்கும் அடுத்த ஆண்டு 2015-ல் சுந்தர் பிச்சை கூகுள் சி.இ.ஓ-வாக நியமிக்கப்படுகிறார். இருவரும் தங்களுக்கிடையே பரஸ்பர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டவர்கள். இன்று கூகுள் நிறுவனம் குறித்து அவர் வைத்துள்ள குற்றச்சாட்டு அவருக்கும் சுந்தர் பிச்சைக்கும் இடையில் விரிசலை உண்டுபண்ணலாம் எனக் கூறுகிறது டெக்னாலஜி வட்டாரம்.
அவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும், கூகுள் மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கூகுள் நம்மை வேவு பார்க்கிறது, நம் தகவல்களைச் சேகரிக்கிறது என்பது உண்மையா? இதை எப்போதாவது சோதித்துப் பார்த்திருக்கிறீர்களா?
- Tags
- Technology