WI vs IND: ரோஹித், கோலிக்கு வாய்ப்பில்லை; இந்தியா தோல்வி – ராகுல் டிராவிட் சொல்லும் லாஜிக் என்ன?

WI vs IND: ரோஹித், கோலிக்கு வாய்ப்பில்லை; இந்தியா தோல்வி – ராகுல் டிராவிட் சொல்லும் லாஜிக் என்ன?

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 18

இந்திய அணியின் தோல்வி குறித்தும் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்தும் ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையிருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி தொடர்ச்சியாகப் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதால் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஸர் பட்டேல் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40.5 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொதப்பியது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 55 ரன்களும், சுப்மன் கில் 34 ரன்களும், சூர்யகுமார் 24 ரன்களும் எடுத்திருந்தனர். இதையடுத்து அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்று தற்போது சமநிலையில் உள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியிருந்த சூர்யகுமார் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்தும் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்தும் ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

Rahul Dravid

இதுபற்றி பேசியுள்ள அவர், “சூர்யகுமார் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. துரதிர்ஷ்டவசமாக, டி20 மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அளவுக்கு, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை. இதை முதல் ஆளாக அவரே ஒப்புக்கொள்வார்!

ஐபிஎல் தொடர் மூலமாக நிறைய டி20 போட்டிகளில் விளையாடி, அனுபவங்களைப் பெற்றவர் அவர். இதுவரை ஒருநாள் போட்டிகளில் அவர் பெரிதாக விளையாடியதில்லை. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் ஒருநாள் போட்டிகள் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், ஒருநாள் போட்டிகளில் எப்படி ஆடவேண்டும் என்பதை அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று வருகிறார் என நம்புகிறேன். மிடில் ஓவர்களில் எப்படி விளையாடுவது எனப் புரிந்துகொண்டு வருகிறார். சூர்யகுமாரிடம் திறமை இருக்கிறது. எனவே அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் வழங்குவோம்” என்று கூறினார்.

virat and rohit

மேலும், விராட் கோலி மற்றும் ரோஹித் அணியில் இடம்பெறாதது குறித்துப் பேசிய டிராவிட், “உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் என மிக முக்கியமான தொடர்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. அதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் இருவரும் தயாராக வேண்டும். இதற்கிடையில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் அவர்களால் சரியாக விளையாட முடியாமல் போய்விடும். அதனால் அவர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வளர்ந்துவரும் அடுத்த இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அவர்களின் ஆட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்கள் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்” என்று கூறினார்.

இதனிடையே ரோஹித், கோலி அணியில் இடம்பெறாததால்தான் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து உங்களின் கருத்து என்ன?

 

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *