தையிட்டிப் போராட்டம் முடிவு – விஹாரையைச் சூழவுள்ள காணிகளை 4 கட்டங்களாக விடுவிக்கத் திட்டம்
- local
- December 31, 2025
- No Comment
- 24
தையிட்டி விஹாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த ஏனைய காணிகளை நான்கு கட்டங்களாக விடுவிப்பதற்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி விஹாரை விவகாரத்திற்குத் தீர்வுகாணும் நோக்கில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு இடையிலான விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (31) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ வரைவொன்று மாவட்டச் செயலரினால் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த கூட்டத்தின் போதே காணி விடுவிப்பு தொடர்பான இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
குறித்த சந்திப்பின் பின்னர் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த காணி உரிமையாளர்கள், “சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குறித்த காணிகள் பொதுமக்களுக்கே உரியது என்பது உறுதிப்படுத்தப்பட்டது .
விஹாரை அமைந்துள்ள பகுதியைத் தவிர்த்து, அதனைச் சூழவுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.விஹாரைக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள காணிகளை மிக விரைவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விஹாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய கட்டடங்களை அகற்றி வேறிடத்திற்கு மாற்றுவதற்குத் தேவையான கால அவகாசத்தைக் கருத்திற்கொண்டு, எஞ்சிய காணிகள் நான்கு கட்டங்களாக விடுவிக்கப்படும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி ஒரு ஆரம்பகட்ட யோசனையாகவே இருப்பதால், ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 3 ஆம் திகதி தையிட்டிப் போராட்டம் முன்னெடுக்கப்படும்” என காணி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, அரசாங்கம் எடுக்கும் ஆக்கபூர்வமான தீர்மானங்களுக்குத் தாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.