பங்களாதேசை தோற்கடித்த பதிரனா; இலங்கை அதிரடி வெற்றி
- Sports
- September 1, 2023
- No Comment
- 16
பௌலிங்கில் பதிரானாவும், பேட்டிங்கில் அசலங்காவும் இலங்கை அணிக்கு முதல் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். சொந்த மண்ணில் வங்கதேச அணியை வீழ்த்தியிருக்கிறது இலங்கை அணி
ஆசியக் கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டி, நேற்று இலங்கையிலுள்ள கண்டி மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி, தனது சொந்த மண்ணில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பேட்டிங்கில் லிட்டன் தாஸ் அணியில் இல்லாதது, வங்கதேச அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு தான். வைரஸ் காய்ச்சலால் பாதித்த லிட்டன் தாஸ், ஆசியக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார். இவருக்குப் பதிலாக அனாமுல் ஹக், மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக முஹமது நைம் மற்றும் டான்ஜித் ஹசன் இருவரும் களமிறங்கினர். போட்டித் தொடங்குவதற்கு முன்பாகவே, பௌலிங்கில் பவர்ஃபுல்லாக உள்ள இலங்கை அணியை இவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. கசுன் ரஜிதா வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில், பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவங்கினார், முஹமது நைம். ஆனால், தீக்ஷனா வீசிய அடுத்த ஓவரிலிருந்து வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல் சரியத் தொடங்கியது. தீக்ஷனா வீசிய பந்து, நேராக டான்ஜித் ஹசனின் காலில் பட்டதால் எல்.பி.டபிள்யு விக்கெட்டாக மாறியது. இதையடுத்து, ஹுசைன் ஷாண்டோ களத்திற்குள் நுழைந்தார். அடுத்தடுத்த ஓவர்களிலும் பௌலிங்கில் மிரட்டியது இலங்கை. ரஜிதா வீசிய 5வது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் வாய்ப்பு வந்தது. ஷாண்டோ அடித்த பந்தை, மிட்-ஆஃபில் நின்று கொண்டிருந்த தசுன் ஷனகா தவறவிட்டார். இது போன்ற வாய்ப்புகளைத் தவறவிடும் கணத்தில் தான், அந்த பேட்ஸ்மேன் நிலையாக நின்று ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார். அதைப் போலவே, அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வந்த நிலையில், ஷாண்டோ மட்டும் தனியாக தாக்குப் பிடித்து வந்தார். 8வது ஓவரில் முஹமது நைம் அவுட்டாகி வெளியேறினார். 8 ஓவர்கள் முடிந்த நிலையில், 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது வங்கதேச அணி.
அடுத்து களம் இறங்கிய ஷகிப் ஹல் ஹசன், சரியாக நின்று விளையாடி இருந்தால் நல்ல ஸ்கோரை எடுத்திருக்க முடியும். ஆனால், பதிரனா வீசிய பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அவரும் கிளம்பிவிட்டார். 13 ஓவர்கள் முடிவில் 50 ரன்களைக் கடந்தது, வங்கதேச அணி. டௌஹித் ஹ்ரிடாய் மற்றும் ஷாண்டோ இருவரும் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தனர். இருவரும் அவசரப்படாமல் பொறுமையாக சிங்கிள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இப்படியே பத்து ஓவர்களைக் கடத்தி விட்ட நிலையில், 24வது ஓவரின் போது, தசுன் ஷனகா வீசிய பந்தில் எல்.பி. டபுள்யூ முறையில் டௌஹித் ஹ்ரிடாய் அவுட்டானார். நடுவர் நாட்-அவுட் வழங்கிய நிலையில், தசுன் ஷனகா ரிவ்யூ கேட்டதன் மூலம் அவுட்டாக மாறியது.
41 பந்துகளில் 20 ரன்களை எடுத்திருந்தார், ஹ்ரிடாய். எவரையும் எதிர்பார்க்காமல் ஒற்றை வங்கப் புலியாய் களத்தில் நின்று உறுமிக் கொண்டிருந்தார், ஷாண்டோ. இவர், 25வது ஓவரின் போது அரைசதத்தைக் கடந்தார். இவர் மட்டும் முன்பே அவுட்டாகியிருந்தால், வங்கதேச அணி நூறு ரன்களைத் தொடுவதற்கே இன்னும் தட்டித் தடுமாறியிருக்கும். ஒருநாள் போட்டிகளில் விளையாடும் ஒரு அணிக்கு, நல்ல பார்ட்னர்ஷிப்பை எவராவது உருவாக்கிவிட வேண்டும். ஆனால், இந்த அணி அந்த வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டது.
அடுத்துக் களமிறங்கிய முஷ்ஃபிகர் ரஹீமும் வீம்புக்கென அவுட் ஆகிவிட்டார். பதிரனா வீசிய 31வது ஓவரில், முஷ்ஃபிகர் ரஹீம் எதிர்கொண்ட பந்து பேட்டில் லேசாக உரசி விக்கெட் கீப்பரின் கைக்குச் சென்றது. ஆனால், நடுவர் நாட்-அவுட் வழங்கியிருந்தார். இரண்டு ரிவ்யூ வாய்ப்பையும் இலங்கை பயன்படுத்திவிட்டதால், மேற்கொண்டு அப்பீல் செய்ய முடியவில்லை. இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி இனிமேலாவது கவனத்துடன் ஆடியிருக்கலாம். ஆனால், இதே ஓவரில் பெரிய ஷாட் அடிக்க முயற்சித்து, தேர்ட்-மேன் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டனார் முஷ்ஃபிகர் ரஹீம்.
அடுத்து வந்த மெஹடி ஹசன் மிராஸை, ஷாண்டோ தேவையில்லாமல் ரன்- அவுட்டாக்கி விட்டார். இந்த வீணான விக்கெட்டுகள் விழாமல் இருந்தால், அணியால் நல்ல ஸ்கோரை எடுத்திருக்க முடியும். அடுத்து வந்த மற்றொரு மெஹடி ஹசனும் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனி ஆளாகச் சமாளித்த வந்த ஷாண்டோ, தீக்ஷனா பௌலிங்கில் போல்ட் அவுட் ஆகி வெளியேறிவிட்டார். இவர், 122 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்த பேட்டிங் வந்த பௌலர்களும் சொற்ப ரன்களில் வெளியேறிவிட்டனர். இறுதியாக, 42.4 ஓவர்கள் முடிவில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது, வங்கதேச அணி.
நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் சிங்கங்களாக வலம்வந்த பதிரனா மற்றும் தீக்ஷனா இருவரும் வங்கப்புலிகளை புரட்டி எடுத்தனர். இதில் பதிரனா நான்கு விக்கெட்டுகளையும், தீக்ஷனா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்திற்குள் வந்தனர், திமுத் கருணரத்னே மற்றும் நிஸ்ஸன்கா. இலங்கையின் ஓப்பனிங், இரண்டு ஓவர்கள் வரைதான் தாக்குப் பிடித்தது. வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்த திமுத் கருணரத்னே, டஸ்கின் அஹ்மத் வீசிய மூன்றாவது ஓவரில் கிளீன் போல்ட் ஆனார். வங்கதேச அணிக்கே டஃப் கொடுப்பது போல், இதற்கு அடுத்த ஓவரில் மற்றொறு விக்கெட்டும் விழுந்தது. ஒப்பனிங் பேட்ஸ்மேனான நிஸ்ஸன்கா, ஷோரிஃபுல் இஸ்லாம் வீசிய நான்காவது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக சதீரா சமரவிக்ரமா மற்றும் குஷல் மென்டிஸ் இருவரும் என்ட்ரி கொடுத்தனர். சமரவிக்ரமா 18 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க, குஷல் மென்டிஸ் 18 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஒரே ஒரு பவுண்டரியை மட்டும் அடித்த மென்டிஸ், ஷகிப் அல் ஹசன் பந்தில் போல்ட் அவுட் ஆனார். பத்து ஓவர்கள் முடிவில், 44 ரன்களை எடுத்திருந்தது இலங்கை.
அடுத்து வந்த அசலன்காவுடன் ஜோடி சேர்ந்தார் சமரவிக்ரமா. இனிமேலும் விக்கெட்டை இழக்கக்கூடாதென, நல்ல வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக் கொண்டிருந்தனர். இலங்கை அணி நூறு ரன்களைக் கடந்த நிலையில், 59 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் சமரவிக்ரமா. இவருக்கு இணையாக அசலன்காவும் சிங்கிள் எடுத்துக் கொண்டிருந்தார். மெஹடி ஹசன் வீசிய 30வது ஓவரில், இறங்கி அடிக்க வந்த போது பந்தைத் தவறவிட்டார் சமரவிக்ரமா. விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்ய, 54 ரன்களுடன் வெளியேறினார் இவர். இதையடுத்து வந்த டி சில்வா, ஷகிப் வீசிய அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டிற்கு கை கோர்த்த தசுன் ஷனகா, இலங்கை அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த அசலன்காவும் 85 பந்துகளில் அரைசதமடித்தார். 39வது ஓவரின் முடிவில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது இலங்கை அணி. அசலன்கா 62 ரன்களும், ஷனகா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- Tags
- Sports