2026 இல் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ள பிரித்தானியா
- world
- January 1, 2026
- No Comment
- 28
பிரித்தானிய அரசாங்கம் தனது 2025 ஆம் ஆண்டு குடிவரவு வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சீர்திருத்தங்களை 2026 ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 2026 ஜனவரி 8 ஆம் திகதி முதல், முக்கிய விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் தகைமை நிபந்தனைகள் கடுமையாக்கப்படவுள்ளன.இதன்படி, திறன்சார் பணியாளர் மற்றும் உயர்திறன் கொண்ட தனிநபர் விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், பி1 தரத்திற்குப் பதிலாக பி2 தர ஆங்கிலப் புலமையை நிரூபிக்க வேண்டும்.
எனினும், ஏற்கனவே இந்த விசாக்களில் இருந்து காலநீடிப்பு செய்பவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது.
2026 பெப்ரவரி 25 ஆம் திகதி முதல், ‘அனுமதி இன்றி பயணம் இல்லை’ என்ற விதிமுறை முழுமையாக நடைமுறைக்கு வரும்.இதன்படி, விசா தேவையில்லாத சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorisation – ETA) முன்கூட்டியே பெற வேண்டும்.
நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான தகுதிக் காலத்தை தற்போதுள்ள 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீடிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
அத்துடன், நிலையான வருமானம் மற்றும் நாட்டின் பொருளாதார பங்களிப்பு குறித்த மேலதிக ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த மாற்றங்கள் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், 2026 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 41,700 பவுண்டுகள் என்ற குறைந்தபட்ச ஆண்டுச் சம்பள எல்லை 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
பணியாளர் பற்றாக்குறை நிலவும் துறைகளுக்கான விசேட சலுகைகள் 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை நீடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.